கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி இன்று உயர்நிலை குழுவுடன் அவசர ஆலோசனை..!!
சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா திரிபு வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் உயர்நிலைக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். இதில் புதிதாக பரவி வரும் கொரோனாவை இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகளையும், பல்வேறு ஆலோசனைகளையும் பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு வழங்குகிறார். வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் எப்படிப்பட்ட சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க என்னென்ன கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளை உடனடியாக கொண்டு வரலாமா அல்லது படிப்படியாக கொண்டு வரலாமா? புதிய வகை கொரோனாவை சமாளிக்க மருத்துவமனைகள் தயாராக இருக்கிறதா? ஆஸ்பத்திரியில் பணியாற்றும் மருத்துவர்கள், நர்சுகள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளார்களா? என்பது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. பின்னர் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.