திருப்பதி: ரூ.10,300 கட்டணத்தில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் வெளியீடு..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற ஜனவரி மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாட்களில் ஏழுமலையானை தரிசனம் செய்தால், துன்பங்கள் நீங்கி, பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைக்கும் என்பதால் திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் என தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி தொடங்கும் 2 ந்தேதியில் இருந்து 11-ந் தேதி வரை தினமும் 2000 பக்தர்கள் வீதம் 10 நாட்களுக்கு 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஸ்ரீ வாணி டிரஸ்ட் டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. அதன்படி ஸ்ரீ வாணி டிரஸ்ட்க்கு ரூ.10 ஆயிரமும், தரிசனத்திற்கு ரூ.300 என ரூ.10,300 செலுத்தி தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் பக்தர்கள் பதிவு செய்தனர். இந்த டிக்கெட் பெற்ற பாக்தர்கள் மகா லகு தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 68,469 பேர் தரிசனம் செய்தனர். 27,025 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.