சீனி வரி மோசடி; முன்னாள் அதிபர் கோட்டாபயவை விசாரணைக்கு அழைக்கத் தீர்மானம்!!
சிறிலங்கா முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் விசாரணைகள் மேற்கொள்வதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சீனி வரி மோசடி தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காக அவர் அழைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவை ஏற்கனவே விசாரணைக்கு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய வெளியிடப்பட்ட சீனி வரி குறைப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நிதியமைச்சின் அதிகாரிகள் கோரிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அண்மைய நாடாளுமன்ற அமர்வில், சீனி வரி மோசடி காரணமாக திறைசேரிக்கு 16 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், குறித்த வர்த்தமானி தொடர்பில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் பந்துல குணவர்தனவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த திங்கள் வாக்குமூலம் பெற முன்னாள் வர்த்தக அமைச்சர் அழைக்கப்பட்ட போதிலும், அவர் வேறு ஒரு தினத்தை கோறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சீனி வரிக்குறைப்பு தொடர்பில் தனக்குத் தெரியாது எனவும், இது தொடர்பில் அப்போதைய அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சவிற்கே அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.