கொரியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் திடீர் முறுகல் !!
கொழும்பில் திட்டமிடப்பட்ட கூட்டத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் மற்றும் அதன் அதிகாரிகளை தென் கொரிய பேரிடர் நிவாரண அறக்கட்டளையின் தலைவர் சோ சுங் லியா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தென் கொரியா எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து ஆராயும் வகையில் சமூக வலுவூட்டல் அமைச்சில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தென் கொரியா வெறும் 40 ஆண்டுகளில் உலகின் மிகவும் வளர்ந்த பொருளாதாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது என்பதுடன், சில வெற்றிகரமான கதைகளைக் கொண்ட நாடு என்ற அடிப்படையில் நேற்று சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தச் சந்திப்பில் உரையாற்றிய தென் கொரிய பேரிடர் நிவாரண அறக்கட்டளையின் தலைவர் சோ சுங் லியா, ஒரு திட்டமிடப்பட்ட கூட்டத்தை ஆரம்பிக்க 30 நிமிடங்கள் தாமதமாக வருவது நல்ல அறிகுறி அல்ல. அமைச்சர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் சரியான நேரத்தில் செயல்படுவதற்கும் பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தென் கொரியாவில் நடந்திருந்தால், அத்தகைய அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சோ சுங் லியா குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற அமைச்சர்களை சந்திப்பதில் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு கூட்டம் திட்டமிடப்பட்டால், அது அந்த நேரத்தில் தொடங்க வேண்டும். அத்தகைய அமைச்சர்களால் அதைச் செய்ய முடியாவிட்டால், அத்தகைய நபர்களைச் சந்திப்பதில் எந்த அர்த்தமும் இல்லை எனவும் சோ சுங் லியா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பொய் சொல்வதும் வாக்குறுதி கொடுப்பதும் சாதாரண விடயமாகி விட்டது, அது அவர்களின் கலாசாரத்தின் அங்கமாகிவிட்டது. ஒரு நாடு என்ற வகையில் வெளிநாட்டவரிடமிருந்து இதுபோன்ற விடயங்களைக் கேட்டு மக்கள் வெட்கப்பட வேண்டும். இலங்கையில் உள்ளவர்களால் அந்தப் பழக்கத்தை மாற்ற முடியாவிட்டால் நாடு வெளிநாட்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
மக்கள் கொடுத்த வாக்குறுதிகளை கடைப்பிடிக்க வேண்டும், நிறைவேற்ற மறக்கக்கூடாது. வாழ்க்கை போனாலும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அமைச்சர்கள் கூட அதையே செய்ய வேண்டும். இல்லை என்றால் இதுபோன்ற அமைச்சர்களை சந்திப்பதில் அர்த்தமில்லை. மக்கள் பொய் சொல்லக்கூடாது. அவர்களுக்கு நல்ல புரிதல் இருக்க வேண்டும் எனவும் தென் கொரிய பேரிடர் நிவாரண அறக்கட்டளையின் தலைவர் கூறியுள்ளார்.
எனவே, இலங்கையில் கல்வி முறையிலும் மக்களின் சிந்தனை முறைகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் சோ சுங் லியா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.