பாராளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி- சபை ஒத்திவைப்பு..!!
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். அருணாசலபிரதேச மாநில எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. அதே போல் மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களும் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி விவாதிக்க கோரி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் அமளியால் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்றும் அமளி ஏற்பட்டது. காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சீன எல்லை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அவர்களை அமைதி காக்கும் படியும், இருக்கையில் அமருமாறும் சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனால் எம்.பி.க்கள் கோஷங்கள் எழுப்பியவாரே இருந்தனர். தொடர்ந்து கூச்சல், அமளி நிலவியது. இதனால் மக்களவையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அதேசமயம் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன.