வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் இன்று முதல் கொரோனா பரிசோதனை- மத்திய அரசு தகவல்..!!
சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் கூறியுள்ளதாவது: உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கும். உலகம் முழுவதும் தினமும் சராசரியாக 5.87 லட்சம் வரை கொரோனா பதிவாகி உள்ள நிலையில், இந்தியாவில் சராசரியாக தினசரி 153 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்து வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவச பயன்பாடு, கைகளை கழுவுவது உள்ளிட்ட கொரோனா நடத்தை விதிகளை பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உறுதி செய்வதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா தொற்று குறித்து தீவிர கண்காணிப்பது, தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவற்றை உறுதி செய்ய அனைத்து பரிசோதனைகளையும் அதிகரிக்க மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. புதிய வகை கொரோனா பரவலை தடுக்க அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் குறிப்பிட்ட பயணிகளிடம் இரண்டு சதவீதம் வரை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.