ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவமனைகளின் தயார் நிலையை உறுதிபடுத்த வேண்டும்- பிரதமர் மோடி..!!
சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றை அடுத்து, இந்தியாவில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய மந்திரிகள் அமித் ஷா, மன்சுக் மாண்டவியா, ஜோதிராதித்ய சிந்தியா, ஜெய்சங்கர், அனுராக் தாக்கூர், பாரதி பிரவின் பவார் மற்றும் மத்திய அரசின் துறை சார்ந்த செயலாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, நெரிசலான பொது இடங்களில் முககவசம் அணிவது உட்பட கொரோனா நடத்தை விதிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்றால் விரைவில் பாதிக்கப்படும் வயதானவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் வழங்குவதை ஊக்கப்படுத்த வேண்டும். பரிசோதனைகளை அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டும். தினசரி அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனை மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும். இது நாட்டில் புதிய மாறுபாடுகளை சரியான நேரத்தில் கண்டறிவதற்கு உதவும். கொரோனா இன்னும் முடிவடையவில்லை. சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். மருத்துவமனைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றின் தயார் நிலையை உறுதிப்படுத்த வேண்டும். அத்தியாவசிய மருந்துகளின் விலை மற்றும் விநியோகத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உலக அளவில் பாராட்டை பெற்ற இந்தியாவின் முன்னணி சுகாதாரப் பணியாளர்களின் அதே தன்னலமற்ற மற்றும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அதல் கூறப்பட்டுள்ளது.