ஆப்கன் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு தடை – கவலை தெரிவித்த இந்தியா..!!
ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என தெரிவித்தனர். ஆப்கனில் பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஆப்கனில் பெண்களுக்கு உயர்கல்விக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து இந்தியாவும் கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், இது தொடர்பான அறிக்கைகளை நாங்கள் கவலையுடன் கவனத்தில் கொண்டுள்ளோம். ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கான காரணத்தை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. உயர்கல்விக்கான அணுகல் உள்பட அனைத்து ஆப்கானிஸ்தானியர்களின் உரிமைகளை மதிக்கும், பெண்கள் மற்றும் சிறுமிகளின் சம உரிமைகளை உறுதிப்படுத்தும் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவ அரசாங்கத்தை நிறுவுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.