கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதைத் தவிருங்கள்: இந்திய டாக்டர்கள் சங்கம் அறிவுரை..!!
சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக சீனாவில் தொற்று அதிரடியாக பரவுவதும், ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவதும் உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கி இருக்கின்றன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகின்றன. இதையொட்டி இந்திய டாக்டர்கள் சங்கம் (ஐஎம்ஏ), பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்:-
* கொரோனா வைரசுக்கு எதிராக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளுங்கள். பொது இடங்களில் முகக்கவசங்கள் அணியுங்கள். தனிமனித இடைவெளியைப் பின்பற்றுங்கள்.
* அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், பிரேசில் போன்ற நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் 5.37 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. * பொதுமக்கள் கூட்டம் கூடுகிற இடங்களுக்கு, திருமண விழாக்களுக்கு, அரசியல் கூட்டங்களுக்கு, சமூக நிகழ்ச்சிகளுக்கு செல்வதைத் தவிருங்கள். வெளிநாட்டு பயணங்களையும் தவிர்த்து விடுங்கள்.
* இந்தியாவில் பொதுத்துறையிலும், தனியார் துறையிலும் வலுவான உள்கட்டுமான வசதிகள், அர்ப்பணிப்பு மிக்க மருத்துவ பணியாளர்கள், அரசு தரப்பில் செயல் ஊக்கம் உள்ள தலைமை, போதுமான மருந்துகள்-தடுப்பூசிகள் கையிருப்பு ஆகியவற்றைக் கொண்டு இந்தியாவால் கடந்த காலத்தைப் போன்று இனியும் எந்த சூழலையும் நிர்வகிக்க முடியும்.
* எந்த சூழலையும் சந்திக்க ஏற்ற விதத்தில் அவசர மருந்துகள், ஆக்சிஜன் வினியோகம், ஆம்புலன்ஸ் சேவைகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க அமைச்சகங்கள், துறைகளுக்கு அரசு உத்தரவிட்டு உச்ச கட்ட ஆயத்த நிலையில் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
* தற்போது நிலைமை பயப்படுகிற அளவுக்கு இல்லை. எனவே பதற்றம் அடையத்தேவையில்லை. ஆனாலும் வருமுன் காப்பது சிறந்தது.
* அனைவரும் தொடர்ந்து கைகளை சோப்பு கொண்டு அல்லது சானிடைசர் திரவம் கொண்டு சுத்தம் செய்து வாருங்கள். காய்ச்சல், தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே டாக்டர்களை ஆலோசியுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.