திருப்பதி மலைப்பாதையில் வாகனம் மோதி சிறுத்தை குட்டி பலி..!!
திருப்பதி வனப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, கரடி, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதைக்கு வருகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலை அலிப்பிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் அதிகாலை 4 மணிக்கு 3 மாத சிறுத்தை குட்டி சாலையை கடந்துள்ளது. அப்போது மலைப்பாதையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சிறுத்தை குட்டி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிறுத்தை குட்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து திருப்பதி வனத்துறை அலுவலர் சதி ஷெட்டிக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த சிறுத்தை குட்டியை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு அதிகாலை நேரத்தில் திருமலைக்கு பைக்கில் மலை பாதையில் சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் மற்றும் பக்தர் மீது அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து தாக்கியது. இதில் பைக்கில் சென்றவர்கள் படுகாயம் அடைந்தனர். வன உயிரியல் பூங்கா அருகில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்து அங்கிருந்த நாயை அடித்துக் கொன்றது. இதனால் பல்கலைக்கழக வளாக விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்கள் இரவு 7 மணிக்கு மேல் அறையை விட்டு வெளியே வரக்கூடாது என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். பல்கலைக்கழகத்திற்குள் வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டுமென மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிறுத்தையை பிடிக்க பல்கலைக்கழக வளாகத்தில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.