சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 450 பவுன் எடையுள்ள தங்க அங்கிக்கு 65 இடங்களில் வரவேற்பு..!!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41 நாள் நடைபெறும் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக கடந்த மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் முதல் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வர தொடங்கினர். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை எட்டியது. மண்டல பூஜை நடைபெறும் 27-ந்தேதி இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கோவில் நிர்வாகத்தினர் எதிர்ப்பார்க்கிறார்கள். இதற்காக கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். 450 பவுன் எடையுள்ள இந்த தங்க அங்கி ஆரன்முளாவில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜையின் போது இந்த தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து நேற்று புறப்பட்டது. தங்க அங்கி ஊர்வலத்துக்கு 65 இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஊர்வலம் பல்வேறு கோவில்களுக்கும் சென்று நாளை மறுநாள் 26-ந் தேதி மதியம் பம்பை சென்றடைகிறது. அங்கு கணபதி கோவிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்று விட்டு அன்று மாலை சபரிமலை சன்னிதானம் சென்றடைகிறது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் 18-ம் படி வழியாக கருவறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. 27-ந் தேதி சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடக்கிறது. அப்போது ஐயப்பன் தங்க அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். மேலும் மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகளும் சபரிமலையில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.