திருநெல்வேலி மக்கள் வங்கி ஊழியர்கள் அடகு நகைகளில் மோசடி ; நகைகளை மீள ஒப்படைக்கவில்லை என குற்றச்சாட்டு!
யாழ்.திருநெல்வேலியில் மக்கள் வங்கியில் அடகு வைக்கப்பட்ட சுமார் 200க்கு மேற்பட்ட பொதுமக்களின் நகைகள் அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களால் மோசடி செய்யப்பட்ட நிலையில் அதனை தமக்கு மீளாப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் மக்கள் வங்கியில் அடகு வைக்கப்பட்ட எமது நகைகள் குறித்த வாங்கி அதிகாரிகளால் மோசடி செய்யப்பட்டது.
இவ்வாறான நிலையில் எமது நகைகள் தற்போது வரை கிடைக்கப் பெறாத நிலையில் நாம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதுடன் பாரிய மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளோம். நகை மோசடியுடன் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சிலர் மீண்டும் வங்கியில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், எமது நகைகளை மீளத் தராமல் இழுத்தடிப்பு செய்வது ஏன்? நாம் வங்கிக்குச் சென்றால் அங்கிருக்கும் முகாமையாளர் ஏதோ புதிய விடயங்களை கேட்பதுபோல் எமது ஆதங்கங்களை கேட்கிறார். பின்னர் நான் மேல் இடத்துக்கு அறிவிக்கிறேன் என கூறுவதே தொடர் கதையாக உள்ளது.
மக்கள் வங்கி அரசாங்கத்தின் வங்கி. பாதுகாப்பானது எனக் கருதியே எமது அவசர தேவை காரணமாக நகைகளை அடகு வைத்தோம். நாம் அடகு நகைகளை உரிய காலப் பகுதியில் எடுக்காவிட்டால் ஒரு நாள் கூட அவகாசம் தராது நகைகளை ஏலத்தில் விட்டு விடுவார்கள். ஆனால் 10 வருடங்கள் கடந்தும் நாம் அடகு வைத்த நகையை மீளத் தராது நொண்டி காரணங்களை கூறி காலம் கடத்தி வருவதை ஏற்க முடியாது.
எமக்கு நாம் வங்கியில் வைத்த நகைகள் வேண்டும் இல்லாவிட்டால் தற்போதைய சந்தை மதிப்பில் பணப் பெறுமதியை தர வேண்டும்.
தொடர்ந்து எம்மை ஏமாற்றலாம் என மக்கள் வங்கி கருதுமானால் வங்கியின் செயற்பாடுகளை முடக்கி பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தயங்க மாட்டோம் என மேலும் தெரிவித்தனர்.