“நலமான பற்கள் நலமான இதயத்துக்கும் உதவுகின்றன”!! (மருத்துவம்)
பற்களையும், பல் ஈறுகளையும் முறையாகப் பராமரிப்பதால் நம்முடைய வாய் புத்துணர்வாக இருப்பது மட்டுமல்ல “சுகாதாரமான பற்கள் சுகமான இதயத்துக்கு வழிசெய்கின்றன” என்கிறார்கள் மருத்துவர்கள்.
பல் ஈறுகளைச் சரியாகப் பராமரிக்காதபோது, அங்கே உள்ள நுண்கிருமிகள் இரத்தத்தில் கலந்து இரத்த நாளங்களில் இரத்த உறைவை ஏற்படுத்தும். இது பல்வேறு இதய நோய்களுக்குக் காரணமாக அமையும்.
பல் ஈறு நோய்களால் ஏற்படும் வீக்கமும் இதயத்தில் இரத்த உறைவு உருவாகக் காரணமாக இருக்கின்றன. இந்த இரத்த உறைவு, இதயத்துக்குச் செல்ல வேண்டிய இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. அதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரித்து, மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
இதய வால்வுகளில் ஏற்படும் தொற்றுகள் பொதுவாக பக்டீரியா கிருமிகளால் ஏற்பட்டாலும், மிக அரிதாக பூஞ்சைகளாலும் உருவாவதற்கான சாத்தியமும் உண்டு. பல் துலக்காமல் போனால், வாயில் உள்ள பக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவை இதய வால்வுகளுக்குச் சென்று, தொற்றுகளை ஏற்படுத்தும்.
புகையிலைப் பயன்பாடு, சரியான ஊட்டச்சத்து இல்லாமை, நீரிழிவு போன்ற காரணங்களால் இதய நோய்கள் ஏற்படுவது போலவே பல் ஈறு நோய்களாலும் இதயம் பாதிக்கப்படலாம். இரத்தக் குழாய் சார்ந்த இதய நோய்களுக்கு, முறையாகப் பல் துலக்காமையே காரணம்.
முறையாகப் பற்களை சுத்தம் செய்யாமல் இருப்பதால் இரண்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று பல் ஈறுகளின் வீக்கத்தில் உள்ள கிருமிகளால் பல் தாடை எலும்புகள் பாதிக்கப்படுகின்றன. இன்னொன்று, ஈறுகளில் உண்டாகும் இரத்தக் கசிவை விழுங்குவதால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது.