சீனாவில் இருந்து ஆக்ரா வந்த நபருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு- வீட்டில் தனிமை படுத்தப்பட்டார்..!!
ஒமைக்ரான் கொரோனா தொற்றின் உருமாற்றமாக பிஎப்.7 வகை கொரோனா கருதப்படுகிறது. இது தற்போது சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று தற்போது மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இதன் பாதிப்பை தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி சீனாவில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா வந்த 40 வயதான நபருக்கு புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தனியார் ஆய்வக பரிசோதனையின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் ஆய்வின் முடிவில் அந்த நபர் பிஎப்.7 ரக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தெரிய வரும்.