வட மாநிலங்களில் மூடுபனி பாதிப்பு- பாட்னாவில் பள்ளிகளை மூட உத்தரவு..!!
வட இந்தியாவில் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. தலைநகர் டெல்லியில் பனிமூட்டம் காரணமாக, 14 ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. ஒருசில பகுதிகளில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் அவதியடைந்தனர். அடுத்த நான்கு நாட்களுக்கு இமாச்சலப் பிரதேசம், டெல்லி, பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, அசாம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் வடக்கு ராஜஸ்தானிலும் இரவு மற்றும் காலை நேரங்களில் அடர்ந்த மூடுபனி காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் குளிர் நிலவும் என்றும் அதன் பின் நிலைமை படிப்படியாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. மூடுபனி மற்றும் கடும் குளிரை கருத்தில் கொண்டு, பீகார் மாநிலம் பாட்னாவில் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் டிசம்பர் 31 வரை மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.