தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை வைத்திருந்த பெண் கைது!!
சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை தம்வசம் வைத்திருந்த பெண் சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை அறிந்து அங்கு சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினர் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன் போது சுமார் 800 வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருந்த 54 வயதுடைய குடும்ப பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் வசம் இருந்து வெளிநாட்டு சிகரெட் அடங்கிய பக்கெற்றுக்கள் மீட்கப்பட்டது.
குறித்த பிரதேசத்தில் போதைப் பொருள்கள் பாவனை தொடர்பாக கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில் உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க உள்ளிட்ட பொலிஸ் கன்டபிள்களான நிமேஸ் (90699) பியுமகே (94143 ) சாரதி குணபால ( 19401 )உள்ளிட்ட அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்கள் யாவும் நிந்தவூர் பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் அண்மைக்காலமாக விசேட அதிரடிப்படையினர் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை துரிதமாக மேற்கொண்டு வருவதனை முன்னிட்டு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.