வைகுண்ட ஏகாதசி அன்று ஏழுமலையானை வழிபட திருப்பதியில் 9 இடங்களில் தரிசன டிக்கெட்டுகள்..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 3-ந்தேதி வைகுண்ட துவாதசி விழா நடக்கின்றன. அதையொட்டி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அலிபிரியில் உள்ள பூதேவி வளாகம், இந்திரா மைதானம் பகுதியில் உள்ள துடா அலுவலகம், ராமச்சந்திரா புஷ்கரணி, ஜீவகோணா ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி வளாகம், விஷ்ணு நிவாசம், சீனிவாசம் ஆகிய தங்கும் விடுதிகள், பைராகிபட்டிடையில் உள்ள மகாத்மா காந்தி பள்ளிக்கூட வளாகம், திருப்பதி சேஷாத்ரி நகர் ஜில்லா பரிஷத் பள்ளி வளாகம் (எம்.ஆர். பள்ளி போலீஸ் நிலையம் பின்பக்கம்), திருப்பதி கோவிந்தராஜசாமி சத்திரங்கள் மற்றும் திருமலையில் உள்ள கவுஸ்தூபம் தங்கும் விடுதி வளாகம் ஆகிய இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன. பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட இருக்கும் கவுண்ட்டர்களை தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் (பொறுப்பு) அனில்குமார் சிங்கால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் அவர் அலிபிரியில் உள்ள பூதேவி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டோக்கன் வழங்கும் மையம், தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் கவுண்ட்டர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதி ஏற்பாடுகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் வைகுண்ட துவார தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டிகள் வினியோகம் செய்ய திருப்பதியில் மட்டும் 9 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பக்தர்களுக்கு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். கூட்ட நெரிசலைத் தவிர்க்க அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க போலீசாரும், தேவஸ்தான அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதைத்தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பிற வைணவ கோவில்களில் நடக்க உள்ள ஏகாதசி விழாவை முனனிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், கலெக்டர் மற்றும் பிற துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பதியில் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் (பொறுப்பு) பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி, தேவஸ்தான இணை அதிகாரிகள் வீரபிரம்மன், சதாபார்கவி, தேவஸ்தான பாதுகாப்புத்துறை அதிகாரி நரசிம்மகிஷோர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குலசேகர், திருப்பதி கிழக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிகிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.