பிரதமர் மோடியை நேரில் சந்திக்க நேரம் கேட்ட பினராயி விஜயன்..!!
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் கேரள அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. இதையடுத்து கேரள அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க கேட்டு பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த முதல்-மந்திரி பினராயி விஜயன் முடிவு செய்தார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு கேரள முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து கடிதம் எழுதப்பட்டது. அதில் கேரள வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க நாளை அல்லது நாளை மறுநாள் பிரதமரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தரவேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் கேரள தலைமை செயலாளர் ஜாய் ஆகியோர் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோல ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் சந்திக்க கேரள அரசு சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசில் குழு கூட்டம் டெல்லியில் நடக்கிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்க அவர் டெல்லி செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.