பீகாரில் வெளிநாட்டவர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!
சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து பீகார் வந்த 4 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பீகாரில் உள்ள கயா விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மியான்மர், தாய்லாந்தில் இருந்து தலா ஒருவர், இங்கிலாந்தை சேர்ந்த இருவர என மொத்தம் 4 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவ அதிகாரி மருத்துவர் ரஞ்சன் சிங்கின் கூறுகையில், கொரோனா உறுதியான 4 பேருக்கும் தொற்று தீவிரமானவையாக இல்லை. இருப்பினும், நோய் பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருவதாக கூறினார்.