ஸ்ரீசைலம் கோவில் மேம்பாட்டு பணி- குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்..!!
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோவிலில் 43 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. மத்திய சுற்றுலா அமைச்சகம் இந்த நிதியை வழங்கி உள்ளது. ஆன்மீகம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான பிரஷாத் திட்டத்தின் கீழ் இப்பணிகள் நடைபெறுகின்றன. ஸ்ரீசைலம் கோவிலை உலகத் தரத்திலான வழிபாட்டுத் தலமாகவும், சிறந்த சுற்றுலா மையமாகவும் மாற்றும் நோக்கில் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. திறந்தவெளி வட்ட அரங்கங்கள், ஒலி-ஒளி காட்சி அமைப்புகள், வாகன நிறுத்துமிடங்கள், சிறந்த உணவுக்கான வசதிகள், பரிசுப் பொருட்களுக்கான கடைகள், வங்கி வசதி மற்றும் ஏடிஎம் வசதிகள், கழிப்பறை வசதிகள் போன்ற பல வசதிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷண் ரெட்டி, சுற்றுலாத்துறை இணை மந்திரி ஸ்ரீபத் நாயக், ஆந்திர துணை முதலமைச்சர் கோட்டு சத்யநாராயணா, ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.