அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா: 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு இந்திய மருத்துவ சங்கம் பரிந்துரை..!!
சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பிஎப்.-7 என்ற புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வகை தொற்றுகள் பரவ தொடங்கி உள்ளன. எனினும் புதிய வகை தொற்றால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என நிபுணர்கள் கூறி உள்ளனர். அதே நேரம், மீண்டும் கொரோனா பரவல் ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டலியா நேற்று காணொலி மூலம் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுசுகாதார நிபுணர்களுடன் கலந்துரையாடினார். அப்போது புதிய வகை தொற்றால் ஏற்படக்கூடிய எழுச்சிக்கான தயார் நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது மந்திரி மன்சுக் மாண்டலியா கூறியதாவது:- கொரோனா பாதிப்பை தடுப்பது தொடர்பான தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்து வருகிறது. இந்த பாதிப்பு தொடர்பாக சரிபார்க்கப்பட்ட தகவலை மட்டும் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கு பகிர வேண்டும். முக கவசம் அணிதல் உள்பட கொரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் அந்த வழிமுறைகளை பின்பற்றுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு கொரோனா பாதிப்பு குறித்த நம்பகமான தகவலை மட்டுமே பகிர வேண்டும். தவறான தகவல்கள் பரவாமல் தடுப்பதும் மிகவும் முக்கியம். இதன் மூலம் கொரோனா நோய் தொற்று குறித்த வதந்திகள், தவறான கருத்துக்கள், அவற்றின் வாயிலாக மக்களிடையே ஏற்படும் அச்சத்தை தடுக்க முடியும். கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விபரங்கள், தடுப்பூசி திட்டம், பாதிப்பை குறைப்பதற்கான அரசின் முயற்சிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியபடுத்தி நோய் தொற்று தொடர்பாக அவர்களிடையே சிறிய அளவில் ஏற்படும் அச்சத்தையும் போக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்திற்கு பின் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜெயலால் கூறுகையில், சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கடைசி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு ஒரு வருடமாகிறது. இத்தகைய நீண்ட இடைவெளி நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். எனவே மக்கள் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை நிர்வகிக்க வேண்டிய மற்றும் அதிக ஆபத்தில் இருக்கும் முன்கள பணியாளர்களுக்கு 4-வது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி (2-வது பூஸ்டர் டோஸ்) போடுவதற்கு பரிசீலிக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம் என்றார். இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் சகஜானந்த் பிரசாத் சிங் கூறுகையில், அதிக செயல்திறன் இருந்தபோதிலும் இந்தியாவில் சுமார் 30 சதவீதம் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. எனவே அதிகபட்ச மக்கள் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்யுமாறு மத்திய மந்திரியிடம் வலியுறுத்தி உள்ளோம். புதிய வகை தொற்றால் பீதி அடைய எந்த காரணமும் இல்லை. ஆனால் நாம் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றார்.