தவறிய பணப்பை உரியவரிடம் ஒப்படைப்பு-வைத்தியரின் மனிதபிமானத்தை பாராட்டிய பொலிஸார்!! (படங்கள், வீடியோ)
வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதுடன் காணாமல் போன பணப்பை மீட்கப்பட்டு பொலிஸார் முன்னிலையில் உரிய நபரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது
கொழும்பு பகுதிக்கு கடந்த 21 ஆம் திகதி அன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ் கடமைக்காக சென்ற நிலையில் கடவத்தை பகுதியில் நள்ளிரவு பணப்பை ஒன்றினை கண்டெடுத்துள்ளார். பின்னர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று பணப்பையை உரிய நபரிடம் ஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். குறித்த இப்பணப்பையில் சுமார் 44030 ரூபா பெறுமதியுடைய பணம் உட்பட சாரதி அனுமதி பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உள்ளடங்கி இருந்தன. தனது பணப்பை காணாமல் சென்ற நிலையில் உரிய நபரும் மிக மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்துள்ளார். இந்நிலையில் தான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி வாயிலாக பணப்பையை தவறவிடப்பட்ட நபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மீட்கப்பட்ட பணப்பை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தவறவிடப்பட்ட பணப்பை மீண்டும் பெற்றுக்கொண்ட தனியார் நிறுவனம் ஒன்றின் சாரதியாக பணியாற்றுகின்ற ஜெ.ஏ தம்மிக்க உதயகுமார (வயது 49) 3 பிள்ளைகள் தனக்கு உள்ளதாகவும் மிக சிரமத்துடன் வாழ்வாதாரத்தை நடத்தி செல்வதாக குறிப்பிட்டார்.இவர் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள தீயாவ என்ற பகுதியில் வசிப்பதுடன் தனது பணப்பையானது அதி வேக பாதையில் பயணம் செய்கின்ற போது கடவத்தை என்ற இடத்தில் வாகன டயர் சரி பார்ப்பதற்கு இறங்கிய நிலையில் தவறவிடப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.இந்நிலையில் பணப்பை தவறவிடப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த நிலையில் கடவுளாக பார்த்து அந்த வைத்தியரை அனுப்பி எனது பணப்பையை மீட்டுக்கொடுத்துள்ளார். இக்காலகட்டத்தில் எம்மை போன்றவர்கள் பொருளாதார பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் மனிதாபிமானம் உள்ள இவ்வாறான வைத்தியர் போன்றவர்களை நினைத்து பெருமை கொள்வதாகவும் அவருக்கு கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்தார்.
மேலும் பணப்பை காணாமல் போன உரிமையாளர் என குறிப்பிடப்பட்ட நபர் பொலிஸார் முன்னிலையில் தான் கொண்டு வந்த ஆதாரங்களை சமர்ப்பித்திருந்ததை அடுத்து கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் முன்னிலையில் காணாமல் போன பணப்பை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் தவறவிடப்பட்ட பணப்பையை பொலிஸார் முன்னிலையில் உரிமையாளிடம் ஒப்படைக்க முயற்சி செய்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்பார்வையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் உள்ளிட்டோர் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.