விசாரணையில் வெளிவந்த உண்மைகள் – மனித கடத்தல்காரர்களை தேடும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்!!
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் சுரக்ஸா இல்லத்தில் தங்கியிருந்த பெண்கள் தொடர்பிலான விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மனித கடத்தல் தொடர்பான உண்மைகளும் வெளியாகியுள்ளதுடன், இது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்ள உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
விசாரணையின் படி எதிர்காலத்தில் பணியக சட்டத்தை மீறும் நபர்கள் மற்றும் மனித கடத்தலில் ஈடுபடும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் சுரக்ஸா இல்லத்தில் தங்கியிருந்த 84 பெண்களிடம் விசாரணை அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இதன்படி, ஆட்கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பெருமளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள விசாரணை அதிகாரிகள் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.