கிளிநொச்சி புதிய பேருந்து நிலைய கையளிப்பு!!
நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த பேருந்து நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 94 மில்லியன் ரூபா என கூறப்படுகிறது.
2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனம் இதன் ஒருபகுதியில் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டது. பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபை இங்கு 2020 இல் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து 2022 மே மாதம் நிறைவு செய்தது.
வடக்கு மாகாண சபைக்கு சொந்தமான காணியில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி புதிய பேருந்து நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை மக்களிடம் கையளிக்கப்படவில்லை என அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பில் தெரியவந்துள்ளது.
அங்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த புதிய பேருந்து நிலையத்தை மக்களிடம் கையளிக்க உடனடியாக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த புதிய பேருந்து நிலையம் பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளதால் தற்போது பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சமீபகால பொருளாதார நெருக்கடியால், அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதன்படி, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த திட்டங்களை வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் தொடங்க அமைச்சர் ஏற்கனவே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.