உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள ராகுலின் ஒற்றுமை யாத்திரையை அகிலேஷ், மாயாவதி புறக்கணிப்பு..!!
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டு உள்ளார். இதுவரை அவர் 9 மாநிலங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டு கடந்த வாரம் டெல்லியை சென்றடைந்தார். சுமார் 3000 கி.மீ. தூரம் ராகுல் நடந்துள்ளார். தற்போது வடமாநிலங்களில் அளவுக்கு அதிகமான குளிர் நிலவுவதால் ராகுல்காந்தியின் பாதயாத்திரைக்கு தற்காலிகமாக 9 நாட்கள் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந்தேதி மீண்டும் ராகுல்காந்தி ஒன்றுமை யாத்திரையை தொடங்க உள்ளார். உத்தரபிரதேசம் வழியாக பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கும் அவர் காஷ்மீரில் ஜனவரி 26-ந்தேதி பாத யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார். காஷ்மீரில் ராகுல் பாதயாத்திரை நுழையும் போது உரிய ராணுவ பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அம்மாநில கவர்னரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் ராகுல் நடைபயணம் மேற்கொண்ட போது அந்ததந்த மாநில கட்சி தலைவர்களை யாத்திரைக்கு காங்கிரசார் அழைத்தனர். அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் போது ராகுலுடன் பாத யாத்திரையில் பங்கேற்க வருமாறு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிற்கும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கும் காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ராகுலுடன் பாத யாத்திரையில் பங்கேற்க இயலாது என்று அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உத்தரபிரதேத்தில் 2 பெரிய கட்சி தலைவர்கள் ராகுல்யாத்திரையை புறக்கணிப்பது காங்கிசாரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.