கொரோனாவை தடுப்பதற்கு மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து விலை ரூ.800..!!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. 2 தவணைகளாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. பின்னர் பூஸ்டர் அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை கோவேக்சினை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. அதன் பரிசோதனை தரவுகளை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கேட்டது. இந்த தரவுகளை மத்திய அரசு ஆய்வு செய்து மூக்கு வழியே செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு கடந்த 23-ந்தேதி அனுமதி அளிக்கப்பட்டது. பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும், பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள இந்த தடுப்பு மருந்து கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நிர்ணயித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விலையை மத்திய அரசும் அங்கீகரித்து விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி ஒரு டோசின் விலை ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு 5 சதவீத ஜி.எஸ்.டி.வரியும், மருத்துவமனை கட்டணமும் உண்டு. இதனால் அனைத்தையும் சேர்த்து ரூ.1000 ஒரு டோசுக்கு செலவாகும். ஒரு டோசில் 4 சொட்டுகள் கிடைக்கும். ஒருவருக்கு 2 சொட்டுகள் செலுத்தப்படும். இந்த தடுப்பு மருந்தை கோவேக்சின், கோவிஷீல்டு செலுத்தி கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக எடுத்துக்கொள்ளலாம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் இந்த தடுப்பு மருந்து தனியார் மருத்துவமனைகளில் ஜனவரி 26-ந்தேதிக்குள் கிடைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.