யாழ் மாவட்ட மட்ட சுகாதார மேம்பாட்டுக் குழு கூட்டம்!! (PHOTOS)
மாவட்ட மட்ட சுகாதார மேம்பாட்டுக் குழு கூட்டம் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (27) 1.30 மணியளவில் நடைபெற்றது.
இதன்போது தற்போது சடுதியாக அதிகரித்துவரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் (2022) டெங்கு நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளானவர்களாக 3294 பேர் பதிவாகியுள்ளதுடன் 09 இறப்புக்களும் பதிவாகியுள்ளன.
தற்போது பருவப்பெயர்ச்சி மழை காலம் என்பதால் டெங்கு நோய் பரவல் அதிகமாகவுள்ளது, இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் 3,4,5 ஆம் திகதிகளை விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக அறிவித்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்
சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் தற்போதைய காலநிலையினால் சடுதியாக அதிகரிக்கும் டெங்கு நோய் பரவலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே கட்டுப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டார்.
இதன்போது யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி ஆ.கேதீஸ்வரன், வைத்திய கலாநிதி எஸ். சிவகணேஸ் மற்றும் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.