யாழில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்கள் அதிகரிப்பு!! (வீடியோ)
யாழ் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் அதிக மரணங்களும் பதிவாகின்றன என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
ஊடக சந்திப்பில் இன்றைய தினம்(27) கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், கோவிட்-19 தொற்று காரணமாக. மாகாணங்களிற்கிடையே ஏற்படுத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து காரணமாக கடந்த இரண்டு வருடங்களிலும் டெங்கு நோயாளர்கள் மற்றும் பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் மிக குறைவாகும்.
யாழ் மாவட்டத்தில் 2022 ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 3294 நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் ஒன்பது மரணங்களும் பதிவாகியுள்ளன.
கடந்த ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலேயே, பருவப்பெயர்ச்சி மழையின் பின் யாழ் மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் 231 டெங்கு நோயாளர்களும், நவம்பர் மாதத்தில் 306 டெங்கு நோயாளர்களும் மற்றும் டிசம்பர்; மாதத்தில் 570 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஐந்து வருடங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மரணங்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டது. இவ் வருடம் நடந்த மரணங்களில் பெரும்பாலானவை நோயாளர்கள் தாமதமாக வைத்திய ஆலோசனையினை நாடியதாலேயே நிகழ்ந்துள்ளன. எனவே காய்ச்சல் போன்ற டெங்கு நோய்க்கான அறிகுறிகளுடையவர்கள் உடனடியாக தகுதி வாய்ந்த மருத்துவர் ஒருவரையோ அல்லது வைத்தியசாலைகளினையோ நாடி உரிய வைத்திய ஆலோசனையைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பருவப்பெயர்ச்சி மழையுடன் ஏற்பட்டுள்ள இவ் டெங்கு பெருந்தொற்றினைத் தடுப்பதற்கு வாராந்தம் உறுதி செய்யப்படும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். எனவே அனைத்து பிரதேசங்களிலும் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை டெங்கு பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாகக் கருத்தில் கொண்டு எதுவித காலதாமதமும் இன்றி சமூக பங்களிப்புடன் நுளம்புகள் உருவாகும் மூலங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
அனைத்து இடங்களிலும் உள்ள அரச தனியார் நிறுவனங்கள், மத ஸ்தலங்கள், பாடசாலைகள் , உயர் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் , கட்டடநிர்மாணங்கள் நடைபெறும் இடங்கள்,மீன் பிடி துறைமுகங்கள் மற்றும வீடுகள், என்பவற்றின் உரிமையாளர்கள், தலைமை அதிகாரிகள் மற்றும் பணிபுரிபவர்கள் தங்கள் நிறுவனங்கள் மற்றும் வீட்டின் உட்பகுதிகளிலும், வெளிச் சுற்றாடலிலும் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் உள்ளனவா என்பதனை கிரமமாக பரிசோதனை செய்வதுடன் நுளம்புகள் பெருகக்கூடிய ஆபத்துள்ள இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”