ரெயில் நிலையங்களை நவீனமயமாக்க புதிய திட்டம்- ரெயில்வே அமைச்சகம் தகவல்..!!
நாடு முழுவது ரெயில் நிலையங்களை நவீனமயமாக்க அமிர்த பாரத் ரெயில் நிலைய திட்டம் என்ற புதிய திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் வகுத்துள்ளது. தொலைநோக்குப் பார்வையுடன் ரெயில் நிலையங்களை தொடர்ந்து மேம்படுத்த இத்திட்டம் வகை செய்யும். ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ரெயில் நிலையங்களின் மேல்தளத்தில் அங்காடிகள் மற்றம் வணிக நிறுவனங்களை அமைப்பது உள்பட குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகள் இந்த திட்டத்தில் இடம் பெற்றிருக்கும். ரெயில் நிலையங்களில் தற்போது உள்ள வசதிகளுக்கு மாறாக புதிய வசதிகளை அறிமுகப்படுத்துதலை இத்திட்டம் நோக்கமாக கொண்டது. தகவல் பலகைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்டவை ரெயில் நிலையங்களில் உறுதி செய்யப்படும். அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள், ஓய்வு அறைகள், அதிகாரிகள் ஆய்வு அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.