சிறுபிள்ளைத்தனமாக புலம்பும் சாணக்கியனை பொருட்படுத்தத் தேவையில்லை – விக்னேஸ்வரன்!!
தமிழ்த்தேசிய கட்சிகளுடன் சிறிலங்கா அதிபர் பேச்சுவார்த்தை மேற்கொண்டமை தொடர்பில் தற்போது வரை கட்சிகளுக்குள் பனிப்போர் மூண்டுகொண்டே இருக்கின்றது.
இந்த வகையில், அண்மையில் தமிழ்த்தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் பின்னர், மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த பேச்சுவார்த்தையில் விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலர் கலந்துகொள்ள முடியாது போயுள்ளது. முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுவிட்டு அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பிய வேளையிலேயே அந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக தகுந்த கால அவகாசம் கிடைக்காமையால் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியவில்லையென அறிவிக்கப்பட்டது. ஆகவே இது தொடர்பில் விக்னேஸ்வரன் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அந்த கடிதம் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தன்னை விமர்சனம் செய்துள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் விசனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“என்னைவிட இரண்டரை மடங்கு வயது குறைந்த சாணக்கியன் ஒன்றும் விளங்காமல் புலம்பியுள்ளார். மேலும் நான் சிறுபிள்ளைத்தனமாகச் செயற்படுகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சாணக்கியன் குறிப்பிட்டார் என்று சிலர் சுட்டிக்காட்டி இருந்தனர். அவர் சிறியவர். அப்படித்தான் பேசுவார். அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை.
நான் அதிபருக்கு கடிதம் எழுதியமை சிறுபிள்ளைத்தனம் என அவர் சொன்னாராம். ஆனால், அந்தக் கடிதம் எழுதியதால் பல விடயங்கள் நடந்துள்ளன.
நாங்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததும் சுமந்திரன் தொலைபேசியில் அழைத்து ரணில் கலந்துரையாடலுக்கு அழைக்கிறார் என்றார்.
ஆகவே போதிய அவகாசம் வழங்காமல் சந்திப்பு திகதி குறிப்பது பொருத்தமற்றது என அதிபருக்கு நான் ஒரு கடிதம் அனுப்பினேன். அந்தக் கடிதம் அனுப்பியதன் பின்னர் தான் அதிபர் செயலகத்திலிருந்து சொன்னார்கள், அந்தச் சந்திப்பு அதிபர் திட்டமிட்டதல்ல, சந்திக்க வரலாமா என சுமந்திரன் கேட்டுள்ளார், சரி,கேட்கிறீர்கள் வாருங்கள் என்று தான், அதிபர் கூறியுள்ளார்.
அதிபர் அழைக்கின்றார் என எமக்குச் சுமந்திரன் சொன்னார். அதையும் நாங்கள் யாழ்ப்பாணம் வந்த பின்னர் தான் சுமந்திரன் அழைப்பு விடுத்தார். நாங்கள் சந்திப்புக்கு வரக்கூடாது என்பதற்காகவே அவர் அப்படி செய்திருக்கின்றார்.
நான் அதிபருக்கு அனுப்பிய கடிதத்துக்கு அனுப்பப்பட்ட பதிலில், சுமந்திரன் கேட்ட சந்திப்பு உத்தியோகப்பற்றற்றது எனவும், ஜனவரி முதல் வாரத்தில் திட்டமிட்டுள்ள சந்திப்புக்கு போதிய அவகாசத்துடன் அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கடிதத்தாலேயே இதெல்லாம் நடந்துள்ளது. என்ன விட இரண்டரை மடங்கு வயது குறைந்த சாணக்கியன் இவையெல்லாம் விளங்காமல் புலம்பியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.