சபரிமலையில் 41 நாட்களில் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம்..!!
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. மண்டல பூஜையில் பங்கேற்க பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை வந்தனர். நேற்று மண்டல பூஜை விழா நடந்தது. இதையொட்டி ஐயப்பன் தங்க அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஐயப்பனை காண கடந்த 41 நாட்களும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. நடை திறந்த முதல் நாளிலேயே கோவிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்தனர். அதன்பின்பு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டியது. அதன்படி கடந்த 41 நாட்களில் மட்டும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை சுமார் 30 லட்சத்தை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல கோவிலுக்கு வந்த பக்தர்கள் வாங்கிய அப்பம், அரவணை மற்றும் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.222 கோடியே 98 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. அடுத்து மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி நடைபெற உள்ளது. சபரிமலை சன்னிதானத்தில் நேற்று மாலை கலச ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம். இதற்காக கோவில் நடை நாளை மறுநாள் 30-ந் தேதி திறக்கப்படுகிறது. அன்று முதல் ஜனவரி 20-ந் தேதி வரை நடை திறந்து இருக்கும். இதுபற்றி கேரள தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் கூறும்போது, மண்டல பூஜையின்போது பக்தர்கள் கோவிலில் எந்தவித இடையூறுமின்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாற்று திறனாளிகள், குழந்தைகள் தரிசனம் செய்ய சிறப்பு வரிசையும் உருவாக்கப்பட்டிருந்தது. இதுபோல மகர விளக்கு பூஜையின் போதும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும், என்றார்.