என்னை ‘பப்பு’ என்று அழைப்பதை பற்றி எனக்கு கவலை இல்லை- ராகுல்காந்தி..!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி பாரத் ஜோடா யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 24-ந் தேதி டெல்லி வந்தடைந்த யாத்திரை, தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வருகிற 3-ந் தேதி மீண்டும் யாத்திரை தொடங்கி காஷ்மீர் நோக்கி செல்கிறது. இதற்கிடையே மும்பையில் பாரத் ஜோடா யாத்திரையின்போது ராகுல்காந்தி அளித்த பேட்டி ஒன்றின் வீடியோ காட்சிகள் ராகுல்காந்தியின் யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. அதில் ராகுல்காந்தியை பப்பு என்று அழைப்பது குறித்த கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், என்னை ‘பப்பு’ என்று அழைப்பதை நான் பொருட்படுத்தவில்லை. அது அவ்வாறு அழைப்பவர்களின் இதயத்தில் உள்ளது. மேலும் அது அவர்களது இதயத்தில் உள்ள பயத்தை காட்டுகிறது. அவர்கள் மகிழ்ச்சி அற்றவர்கள். என்னை பல பெயர்களில் அழைப்பதை நான் வரவேற்கிறேன். இதனை நான் நன்றாக உணர்கிறேன். தயவு செய்து எனது பெயரை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். எனது பாட்டி இந்திராகாந்தி, இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுவதற்கு முன்பு அவர் ‘குங்கி குடியா’ என்று அழைக்கப்பட்டார். 24 மணி நேரமும் என்னை தாக்கும் அதே நபர்கள் எனது பாட்டியை ‘குங்கிகுடியா’ என்று அழைத்தார்கள். திடீரென்று ‘குங்கிகுடியா’இரும்பு பெண்மணி ஆனார். அவர் எப்போதும் இரும்பு பெண்மணியாகவே இருந்தார். எனவே என்னை என்னவேண்டுமானாலும் அழைக்கலாம். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.