விசேட டெங்கு ஒழிப்பு தினங்கள் பிரகடனம்!!
நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31) ஆகிய தினங்களை விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த 04 வாரங்களில் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த டெங்கு ஒழிப்பு தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தினங்களில் நாளொன்றுக்கு 200 முதல் 300 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் பதிவாவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
டிசம்பர் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 75,434 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர், இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாகும்.
தற்போதைய நிலைமை மேலும் வளர்ச்சியடையும் பட்சத்தில் ஜனவரி மாதத்தில் நாடு முழுவதும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
டெங்கு வைரஸை பரப்பும் ஏடிஸ் நுளம்புகளின் எண்ணிக்கை நாட்டின் பல பகுதிகளில் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் பூச்சியியல் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
எனவே, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களும் விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, அன்றைய தினம் ஒவ்வொருவரும் தமது வீடுகளிலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை ஆராய்ந்து அவற்றை அகற்றுமாறும் சுகாதார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.