;
Athirady Tamil News

கொரோனா புதிய அலை உருவாகுமா? எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் விளக்கம்..!!

0

சீனாவில் பரவி உள்ள பி.எப்-7 மற்றும் மூன்று வகை வைரஸ்கள் உலக நாடுகளையே அச்சுறுத்தும் வகையில் மாறி விட்டது. ஒமைக்ரானின் மரபணு மாற்றங்களான 4 வைரஸ்கள் ஒன்றிணைந்து சீனாவில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்த கொரோனா தாக்கம் தற்போது மெல்ல மெல்ல வெளிநாடுகளுக்கும் பரவி வருகிறது. சீனாவை மீண்டும் பயமுறுத்திய புதிய கொரோனா பரவல் 10 நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டு தற்போது குறைய தொடங்கி இருக்கிறது. அதே சமயத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அந்த வைரஸ் தாக்கம் தற்போது சற்று அதிகரித்து உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச அளவில் கொரோனா பரவல் மற்றும் உச்சம் தொட்டதை ஆய்வு செய்து உள்ள சர்வதேச நிபுணர்கள் புதிய கொரோனாவால் மிகப்பெரிய பாதிப்புகள் வர வாய்ப்பு இல்லை என்று உறுதிபட தெரிவித்து உள்ளனர். இந்தியாவிலும் கடந்த கால கொரோனா புள்ளி விவரங்களின் அடிப்படையில் தற்போதைய பி.எப்-7 வைரஸ் தாக்கம் எப்படி இருக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டு உள்ளனர். அதன்படி அடுத்த மாதம் (ஜனவரி) இந்தியாவில் கொரோனா தாக்கம் சற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்த அதிகரிப்பு புதிய கொரோனா அலையாக மாற வாய்ப்பே இல்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் உறுதிபட தெரிவித்து உள்ளனர். இதற்கு முன்பு கொரோனா தாக்கம் வெளிநாடுகளில் அதிகரித்த போதெல்லாம் 30 முதல் 35 நாட்களுக்குள் அதன் பிரதிபலிப்பு இந்தியாவில் எதிரொலித்தபடி இருந்தது. இதன் அடிப்படையில் பார்த்தால் அடுத்த மாதம் இந்தியாவில் பி.எப்-7 ரக வைரஸ் சற்று அதிகமாக மக்களிடையே பரவக்கூடும். அதனுடைய அறிகுறிகள் முன்பு போல மிக பயங்கரமாக இருக்காது. சாதாரண ஜலதோஷம் போலத்தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எப்-7 உள்ளிட்ட தற்போது பரவிக் கொண்டிருக்கும் 4 விதமான வைரஸ்கள் ஒமைக்ரான் தொடக்க கால வைரஸ்கள் போல சக்தி வாய்ந்தவை அல்ல. தற்போதைய வைரஸ்கள் அனைத்தும் வீரியம் குறைந்தே பரவி வருகின்றன. எனவே இது புது கொரோனா அலையாக உருவெடுக்காது என்று மூத்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். தற்போது கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டுள்ள சீனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி விட்டது. வெளிநாட்டு பயணிகளுக்கு இருந்த கட்டுப்பாடுகளையும் விலக்கி இருக்கிறது. இதன் மூலம் கொரோனா தாக்கம் வீழ்ச்சி அடைந்து இருப்பதை சர்வதேச அளவில் சீனா உறுதிப்படுத்தி இருக்கிறது. சீனாவை தொடர்ந்து சில நாடுகளில் பி.எப்-7 வைரஸ் பரவினாலும் இந்தியாவில் அதன் தாக்கம் சுத்தமாக இல்லை என்ற நிலைதான் தற்போது உள்ளது. கடந்த வாரத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளில் 6 ஆயிரம் பேரிடம் சோதனை அடிப்படையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த 6 ஆயிரம் பேரில் 38 பேருக்கு மட்டும்தான் லேசான கொரோனா தாக்கம் இருந்தது. அந்த 38 பேருக்கும் பி.எப்-7 ரக வைரஸ் பாதிப்பு இல்லை என்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் புதிய வைரஸ் பரவல் இல்லை என்பதும் நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. என்றாலும் வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா பரவுவதால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தற்போது அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில்தான் புதிய கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. அடுத்த 30 நாட்களில் இந்தியர்கள் முன்னெச்சரிக்கையுடன் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் இந்தியாவிற்குள் புதிய கொரோனா பரவலை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்தியாவில் தற்போது 3,468 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பி.எப்-7 ரக வைரஸ் பாதிப்பால் யாரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை. எனவே புதிய அலை வர வாய்ப்பு இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். என்றாலும் நாடு முழுவதும் 20 ஆயிரம் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள 1 லட்சத்து 70 ஆயிரம் டாக்டர்கள், 3 லட்சத்து 20 ஆயிரம் நர்சுகள், 1 லட்சத்து 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.