விவசாயிகளுக்கு ரூ.800 கோடி நிதி !!
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ள 8 பில்லியன் ரூபாய் ( 800 கோடி) நிதி, இரண்டு வாரங்களுக்குள் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
விவசாயிகளின் கணக்குகளில் நிதி வரவு வைக்கும் நிகழ்வு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் வியாழக்கிழமை (29) காலை 10 மணியளவில் விவசாய அமைச்சில் நடைபெற்றது.
இந்தத் திட்டத்தின் கீழ், 4 பில்லியன் ரூபாய் விவசாயிகளின் கணக்கில் வியாழன் (29) வரவு வைக்கப்பட்டதுடன், இன்று (30) 2 பில்லியன் ரூபாயும் மீதமுள்ள 2 பில்லியன் ரூபாய் ஜனவரி 1ஆம் திகதிக்குப் பின்ன விவசாயிகளின் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இரண்டு வாரங்களுக்குள், அனைத்து நெல் விவசாயிகளுக்கும் தொடர்புடைய நிதி அவர்களின் சொந்தக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய மேற்குறிப்பிட்ட நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி ஒதுக்கியிருந்தது.
கடந்த பெரும்போக அறுவடையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 08 பில்லியன் ரூபா நிதி உதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஹெக்டேயர் வயல் நிலத்தை கொண்ட விவசாயிகளுக்காக 10,000 ரூபாய் மற்றும் 02 ஹெக்டேயர் வயல் நிலத்தை கொண்ட விவசாயிகளுக்காக 20,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.