மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியுடன் நெருக்கம் காட்டுகிறது பாஜக- காங்கிரஸ் விமர்சனம்..!!
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். ரூ.7800 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கும் அவர், முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஹவுரா-நியூ ஜல்பாய்குரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் ஜோகா-தரதாலா இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், பிரதமரின் மேற்கு வங்க பயணத்தை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் மூத்த எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளதாவது: ஒரு ரெயில் இயக்கத்தை நாட்டின் பிரதமர் தொடங்கி வைக்கிறார் என்பதை நாம் கேள்விப்பட்டதே இல்லை. நான் ரெயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளேன். ஆனால் எங்கள் ஆட்சியின் போது பிரதமர் மன்மோகன் சிங் எந்த ரெயில் இயக்கத்தையும் தொடங்கி வைத்ததில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை மந்திரி அமித் ஷா மேற்கு வங்காளத்திற்கு வந்தார். தற்போது மம்தாவுடன் சமரசம் செய்ய பிரதமர் மோடி வருகிறார். இதனால் மம்தா மற்றும் அவரது கட்சியினருக்கு எதிரான சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணையின் வேகம் குறையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.