வர்த்தக மேல் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் குறித்து அவதானம்!!
இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் பிரதிநிதிகள், வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவில் கருத்துத் தெரிவித்தனர் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்துவது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள 8 ஜனாதிபதி செயலணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த அதிகாரிகள், இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் அண்மையில் கருத்துக்களை முன்வைத்தனர்.
மேற்படி குழு அண்மையில் (27) பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) மதுர
விதானகே தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஜனாதிபதி செயலகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இலங்கையில் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்துவதற்கான ஜனாதிபதி செயலணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுங்கம், நீதி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதானிகள் இந்தக் குழுவின் முன்னிலையில் விரிவான விளக்கத்தை முன்வைத்தனர்.
தொழில்முயற்சிகள் தொடர்பில் ஒன்லைன் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல், மனிதர்களின் ஈடுபாட்டைக் குறைத்தல், முடிந்தவரை செலழிக்கும் நேரத்தைக் குறைத்தல் மற்றும் செயல்திறனை அதிகரித்தல் குறித்த பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன. அத்துடன், 8 ஜனாதிபதி செயலணிகளின் செயற்பாட்டுத் திட்டம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், வணிகங்களைப் பதிவுசெய்தல், அவற்றை விஸ்தரித்தல் மற்றும் அரசாங்கத் தரப்பினால் பெற்றுக் கொடுக்கக் கூடிய ஒத்துழைப்புக்கள் குறித்தும் வருகை தந்திருந்த அதிகாரிகள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
அத்துடன், இலங்கையில் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்துவது தொடர்பாக நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான தீர்வுகள், குறிப்பாக வர்த்தக மேல் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் குறித்தும் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த இக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) மதுர விதானகே, இந்த ஒவ்வொரு அம்சம் தொடர்பாகவும் பிராந்திய செயலக மட்டத்திலிருந்து விழிப்புணர்வூட்டல் வேலைத்திட்டங்களை தயாரிப்பது முக்கியம் எனச்
சுட்டிக்காட்டினார். இந்த விடயங்களை ஒவ்வொரு மட்டத்திலும் சாதகமான முறையில் கையாள முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அனுர பிரியதர்ஷன யாப்பா, மொஹமட் முஸ்ஸம்மில், சஞ்சீவ எதிரிமான்ன, கோகிலா குணவர்தன மற்றும் லலித் வர்ணகுமார ஆகியோர் கலந்துகொண்டனர்.