நாவலனின் அயராத முயற்சியால் புங்குடுதீவுக்கு மீளக்கிடைக்கபெற்ற நன்னீர் சுத்திகரிப்பு நிலையம்!! ( படங்கள் இணைப்பு )
ங்குடுதீவு பகுதியில் நன்னீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக ஐம்பது லட்ச ரூபாயினை மத்திய அரசு 2019 ல் ஒதுக்கீடு செய்திருந்தது. ஏற்கனவே 2018 ல் புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கண்ணகை அம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட நன்னீர் சுத்திகரிப்பு நிலையம் வெற்றியளித்திருந்தமையால் புங்குடுதீவுக்கு மேலுமொரு நன்னீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் நோக்குடன் இந்நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களின் பரிந்துரைக்கமைய புங்குடுதீவு முதலாம் வட்டாரம் நண்பர்கள் சனசமூக நிலையத்தின் வளாகத்தில் அமைந்துள்ள கிணறு இந்நிலையம் அமைப்பதற்கான நீர்நிலையாக தெரிவுசெய்யப்பட்டிருந்தது. மேற்படி கிணற்றினை அண்மித்த சுற்றாடலில் அதிகளவான மக்கள் வாழ்ந்துவருவதோடு அதிகளவான நீர் ஊற்றினை கொண்டதாக இக்கிணறு காணப்படுவதாலும் இப்பகுதியை திரு. கருணாகரன் நாவலன் பரிந்துரை செய்திருந்தார். மேற்படி நன்னீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் 2020 ல் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவராக தலைவராகவும் , ராஜபக்ச குடும்ப ஆதரவாளராகவும் செயற்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனால் அத்திட்டமானது யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தது. ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தீவக மக்களின் இடப்பெயர்வு கணிசமாக அதிகரித்திருத்திருந்த நிலையில் என் கனவு புகழ் அங்கஜன் ராமநாதன் தேர்தல் வாக்குகளை அடிப்படையாகக்கொண்டு மேற்கொண்ட இந்த செயற்பாட்டினை கீழ்த்தரமான அரசியற் செயற்பாடென்றெ கருதவேண்டும்.
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் அவர்கள் அங்கஜனின் தவறான செயற்பாடுகளை ஊடகங்கள் ஊடாக கவனயீர்ப்பு செய்திருந்ததோடு தொடர்ச்சியாக அரச உயரதிகாரிகளை சந்தித்து மீளவும் அந்நிதி ஒதுக்கீட்டினை பெற்று புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் நன்னீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதற்கு அயராது உழைத்திருந்தார் .
இந்நிலையில் அண்மையில் மேற்படி நிலையத்தின் பாவனைக்காக சொந்த நிதியுதவியில் தளபாடங்களையும் , சில உபகரணங்களையும் வழங்கியிருந்தார். வேலணை பிரதேச சபை உறுப்பினர் வசந்தகுமாரன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.