;
Athirady Tamil News

பிரதமர் மோடி தாயார் மரணம்- ஜனாதிபதி திரவுபதி, அமித்ஷா, ராகுல் காந்தி இரங்கல்..!!

0

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர் அமித்ஷா, ராகுல்காந்தி மற்றும் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தாயார் ஹீராபென்னின் பண்புகளை பிரதமர் மோடி உள்வாங்கியுள்ளார். ஹீராபென்னின் 100 ஆண்டுகால முயற்சியானது இந்திய லட்சியங்களின் சின்னமாகும். பிரதமர் மோடி ‘மாத்ர தேவோ பவ’ உணர்வையும், ஹீரா பென்னின் நற்பண்புகளையும் தன் வாழ்வில் கடைபிடித்து வருகிறார். ஹீரா பென்னின் புனித ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்துக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார். தொடரந்து துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறுகையில், “பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தாய்மையின் சிறப்பை பிரதிபலிக்கும் எளிமை மற்றும் கம்பீரத்தை கொண்டவர்” என்றார். மேலும், மத்திய அமைச்சர் அமித்ஷா, ” பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னின் தியாக வாழ்க்கை என்னெற்றும் நினைவு கூறப்படும். ஒரு மனிதனின் வாழ்க்கையில் முதல் நண்பன் மற்றும் ஆசிரியை ஒரு தாய் ஆவார். தாயை இழக்கும் வலி சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் மிகப்பெரிய வலி. குடும்பத்தை வளர்ப்பதற்கு ஹீரா பென் எதிர்கொண்ட போராட்டங்கள் அனைவருக்கும் முன்மாதிரியாகும். அவரது தியாக துறவற வாழ்க்கை என்றும் நம் நினைவில் இருக்கும். இந்த துயரத்தின்போது பிரதமர் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஒட்டு மொத்த தேசமும் நிற்கிறது. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனைகள் பிரதமர் மோடிக்காக உள்ளன. ஓம் சாந்தி” என்றார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் மறைவால் நான் மிகுந்த வேதனை அடைகிறேன். ஒரு தாயின் மரணம் ஒருவரது வாழ்வில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. பிரதமருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், “போராட்டங்கள் நிறைந்த கடினமான வாழ்க்கையின் மூலம் தனது குடும்பத்துக்கு ஹீராபென் அளித்த முயற்சியே மோடி போன்ற தலைவரை நாட்டுக்கு வழங்கியுள்ளது. அவரது எளிமையான மற்றும் கருணையுள்ள உருவம் எப்போதும் நம்முடன் இருக்கும்” என்றார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்னின் மறைவு செய்தி வருத்தம் அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், “பிரதமர் மோடியின் தாயார் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந் தேன். தனது அன்பான தாயை இழந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். துக்கத்தின் இந்த நேரத்தில் எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உங்கள் குடும்பத்துடன் உள்ளன” என்றார். முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு:- தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உள்ள பந்தத்தை போல விலைமதிப்பற்றது மற்றும் விவரிக்க முடியாதது இறைவனின் படைப்பில் எதுவும் இல்லை. ஹீரா பென்னின் ஆத்மா அமைதி பெறட்டும். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி:- பிரதமர் நரேந்திர மோடி யின் தாயார் ஹீராபென் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். மறைந்த புண்ணிய ஆத்மா வுக்கு இறைவன் இடம் தரட்டும். இந்த வேதனை யான தருணங்களில் பிரத மர் மற்றும் அவரது குடும்பத் தினர் அனைவருக்கும் தைரி யம் கொடுங்கள். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.