இடமாற்றம் பெற்ற நீதவான் ஐ.எம். றிஸ்வானை சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் பாராட்டி, கௌரவித்து விடைகொடுத்தது !
சம்மாந்துறை நீதிமன்றத்தில் நீதவானாக கடமையாற்றி கொழும்பு நகருக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் கௌரவ நீதவான் ஐ.எம். றிஸ்வான் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு பிரியாவிடை வைபகம் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்க தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அன்வர் சியாத்தின் தலைமையில் சம்மாந்துறை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்றது.
நீதவான் ஐ.எம். றிஸ்வான் நீதிபதியாக சம்மாந்துறை நீதிமன்றத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில் அவர் நீதித்துறைக்கும், சம்மாந்துறை பிராந்தியத்தில் குற்றங்களை குறைக்கவும் வழங்கிய அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை பாராட்டிய சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தினர் நினைவுச்சின்னங்களை வழங்கி கௌரவித்தனர்.
இடமாற்றலாகி செல்லும் நீதவான் கௌரவ ஐ.எம். றிஸ்வான் அவர்களை பற்றி உரையாற்றிய சட்டத்தரணிகள் சங்க தலைவர் அன்வர் சியாத்; தனக்கான தனியான சிறப்பியல்புகளை கொண்டிருந்த நீதவான் அவர்கள் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிவுக்கு கொண்டுவந்தமையால் பொதுமக்கள் பலரும் பல்வேறு விரயங்களை தவிர்த்துள்ளனர். சட்டத்தரணிகளுடனும் புரிந்துணர்வுடன் நடந்துகொண்ட நீதவான் சட்டத்தரணிகளுடன் முரண்பட்ட சம்பவங்கள் எதுவுமில்லை என்றார்.
இந்நிகழ்வில் மேலும் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா உரையாற்றும் போது, அர்ப்பணிப்பு மிக்க சேவைத்திறன் கொண்ட நீதவான் தனது அடைவு மட்டங்களில் மேலும் பல உயர்வுகளை அடைய பிராத்திப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்தும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிவுக்கு கொண்டுவந்த கௌரவ நீதவான் இன்னும் பல முன்னேற்றங்களை அடைய வாழ்த்துவதாக சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல். நசீல் தனதுரையில் தெரிவித்தார். மேலும் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ். முத்துமீரான், சட்டத்தரணி எம். சலீம் ஆகியோரும் நீதவான் தொடர்பிலான தமது வாழ்த்துரைகளை வழங்கினர். இந்நிகழ்வை சிறப்பிக்குமுகமாக சம்மாந்துறை நிதிமன்றத்திற்கு புதிய நீதவானாக நியமிக்கப்பட்டுள்ள டீ. கருணாகரன் அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன் சட்டத்தரணிகள் சங்க நிர்வாகிகள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.