இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு ஸ்தாபிக்கப்பட்டது !
இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பி இளம் சந்ததியை ஆற்றலும், நல்லொழுக்கமுமிக்க சந்ததியாக உருவாக்கும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அனுசரணை வலையமைப்பு நிறுவனமான “இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு” அங்குரார்ப்பண வைபகமும் நிர்வாகத்தெரிவும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் யூ.எல்.ஹபீலாவின் ஒருங்கமைப்பில் மருதமுனை பெண்கள் நிலையத்தில் இடம்பெற்றது.
இனங்களுக்கிடையிலான உறவுகளின் முக்கியத்துவம், நாட்டை கட்டியெழுப்ப இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஏன் அவசியப்படுகின்றது, இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழுவின் தேவைகள், வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட இந்த நிகழ்வில் மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்வியியல் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எம்.எஸ்.ஏ. அன்ஸார் மௌலானாவின் தலைமையில் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது.
புதிய நிர்வாக சபையின் செயலாளராக கல்முனை கமு/கமு/அஸ்ஸுஹரா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ். ஆர்.மஜீதியாவும், பொருளாளராக ஸ்ரீலங்கா டெலிகொம் உத்தியோகத்தர் எஸ். துவாரகாவும், வெளியீடுகளுக்கான இணைப்பாளராக கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதாவும், செயற்குழு உறுப்பினர்களாக சிரேஷ்ட ஊடகவியலாளரும், அட்டாளைசேனை சமூர்த்தி உதவி முகாமையாளருமான எஸ்.எல். அப்துல் அஸீஸ், கல்முனை வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் திருமதி பத்திரன, ஆசிரியர்களான வீ. தையூப், எம். விஜிலி மூஸா, திருமதி ஜன்னா ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்த இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு எதிர்வரும் காலங்களில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்குவது, சமாதான இலங்கையை கட்டியெழுப்புவது, தலைமைத்துவ பண்புகள் நிறைந்த இளம் தலைமுறையை உருவாக்குவது போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.