சிறிலங்கா அதிபர் தலைமையிலான அரசாங்கத்தை விமர்சித்த சஜித் !!
சிறிலங்கா அதிபர் தலைமையிலான அரசாங்கம் நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக எதுவும் செய்யாதபோது, ஐக்கிய மக்கள் சக்தி செல்வந்தர்களுடன் தொடர்பு கொண்டு பாடசாலைகளுக்கு உதவி புரிவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இன்று (30) ஹக்மன ஊருபொக்க தேசியப் பாடசாலைக்கு ‘பிரபஞ்சம்’வேலைத்திட்டத்தின் கீழ் 55 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து ஒன்றை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சிறிலங்கா அரசாங்கம் இளைஞர்களை பயன்படுத்தி உண்டியல்கள் ஆட்டி கோடிக்கணக்கில் பணம் சேகரித்து ஆடம்பரமான கட்சி அலுவலகத்தை நிர்மானித்து மகிழ்ச்சியில் மூழ்கி,அப்பாவி மக்களை மறந்து செயற்படுகின்றனர்.
இவர்கள் பிரபு வர்க்க சோசலிசவாதிகளாகும். பாடசாலைகளுக்கு பேருந்து வழங்கும் வேலைத்திட்டத்தைக் கண்டு இவர்கள் பொறாமை கொள்வார்கள்.
பின்தங்கிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தின் மூலம் ஓரளவுக்கு பலம் பெற்றால் கபட அரசியல்வாதிகளின் பிள்ளைகள் போல் நடந்து கொள்வார்கள் என அவர்கள் பொறாமை கொள்வார்கள்.
இந்த சோசலிச தலைவர்கள் பிரபு வார்க்கத்தினர் அணியும் மிகவும் மதிப்புமிக்க ஆடைகளை அணிந்த வண்ணம் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் நிவாரணங்களை விமர்சனம் செய்கிறார்கள்.
எமது நாட்டில் தற்போது அரச பயங்கரவாதம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கருத்து தெரிவிக்கும் உரிமை இல்லை.
அவர்கள் தவறு செய்திருந்தால் சட்டத்தின் பிரகாரம் அதனை எதிர்கொள்வதை விடுத்து அரச பயங்கரவாதம் நடைமுறைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக முன்நிற்க நாம் அனைவரும் ஒன்றாக எழுச்சி பெற வேண்டும்.”என தெரிவித்தார்.