ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கிறது- பிரதமர் மோடி..!!
மேற்கு வங்க மாநிலத்தில் தூய்மை கங்கை இயக்கம் தொடர்பான திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: நதிகளை தூய்மைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவற்றில் கழிவுநீர் கலக்காமல், சுற்றியுள்ள பகுதிகளில் நவீன நீர் சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கான தேவைகளைக் கருத்தில் கொண்டு இவை மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 8 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் 800 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரைவில் 1,000 கிலோ மீட்டராக அதை அதிகரிக்கும் நோக்குடன் பணிகள் நடைபெறுகின்றன. தேசத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பல்வேறு அரசு அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது முக்கிய சவாலாக இருந்தது. ஒருங்கிணைப்பு இடைவெளியை நீக்கும் நோக்கத்திலேயே பிரதமரின் விரைவுசக்தி பெருந்திட்டம் தொடங்கப்பட்டது. புதிய விமான நிலையங்கள், நீர்வழித்தடங்கள், துறைமுகங்கள் மற்றும் சாலைகள் போன்றவை பொதுமக்களுக்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பை உறுதி செய்கின்றன. 21-ம் நூற்றாண்டில நமது திறன்களை சரியாகப் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்லவேண்டும். தற்போது நாட்டில் 100-க்கும் மேற்பட்ட நீர்வழித்தடங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வணிகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், நவீனரக பயணக் கப்பல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை மிகப் பெரிய நம்பிக்கையுடன் பார்க்கிறது. இந்த நம்பிக்கையை தொடர்ந்து பராமரிக்க ஒவ்வொரு இந்தியரும் தங்கள் முழு பலத்தையும் செலுத்தி உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.