நாடு முழுவதும் 1,50,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்கள் செயல்பாட்டுக்கு வந்தன- மத்திய அரசு தகவல்..!!
நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31 ஆம் தேதி (இன்று) க்குள் 1,50,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களை அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பே இந்த சாதனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தியா தான் நினைத்த இலக்கை வெற்றிகரமாக அடைந்துவிட்டதாகவும், இந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியால், பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை யதார்த்தமாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பிரதமர் மோடி இந்த சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆயுஷ்மான் சுகாதார மையங்கள் நாடு முழுவதும் மக்கள் ஆரம்ப சுகாதார வசதிகளை எளிதாக பெற உதவும் என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்காக நாடு முழுவதும் 86.90 கோடிக்கும் அதிகமானோர் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.