“ஒருங்கிணைந்த மாதிரி கிராமம்” வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலகத்தினால் சிறுவர் கழகம் ஸ்தாபிப்பு !!
மகளீர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் சமூக வலுவூட்டல் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு “ ஒருங்கிணைந்த மாதிரிக் கிராமத் திட்டம்” மற்றும் இறக்காமம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்தின் “ மகிழ்ச்சியான குடும்பம்” ஆகிய தொனிப்பொருளின் கீழ் மாதிரி கிராம வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இறக்காமம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் மற்றும் இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு என்பன இணைந்து இறக்காமம் – 07 ஆம் கிராம சேவகர் பிரிவில், செனட் கிராமம்” எனும் கிராமத்தில் குறித்த நிகழ்ச்சித் திட்டத்திற்காக தெரிவு செய்யபட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தினூக செனட் கிராமத்தின் சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியாகவும் அவர்களுடைய சுய பாதுகாப்பான சுற்றுச்சூழல், சுகாதார நடைமுறை மற்றும் ஆரோக்கிய வாழ்க்கைத்தரம், சிறுவர்களுக்கு பாதுகாப்பான மகிழ்ச்சிகரமான சிறுவர் நேய கிராமம் போன்றவற்றின் கீழ் முன்மாதிரி கிராம உருவாக்கத்திற்கான வேலைத்திட்டங்கள் அக்கிராம மக்கள் ஊடாகவே செயற்படுத்தப்படவுள்ளது.
மேலும், சுய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையிலான வீட்டுத்தோட்டம், போதைப் பாவனையற்ற மகிழ்ச்சிகரமான குடும்ப, சமூக சூழல், பெண்களுக்கான சமவாய்ப்பும் பங்கேற்பும், பொது வேலைத்திட்டங்கள் மீதான சமூக பங்களிப்பு, அனைத்து விதமான வன்முறைகள் ஆபத்துக்கள் அற்ற அன்பையும் மகிழ்ச்சியையும் பரஷ்பரிக்கும் சமூக வாழ்வியல் முன்மாதிரிகளைக் கொண்ட கிராமமாக இது உருவாக்கப்படவுள்ளது. இவ் வேலைத்திட்டத்தின் தெரிவுசெய்யப்பட்ட செனட் கிராமத்தில் சிறுவர் கழகம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு செனட் கிராமத்தில் இடம்பெற்றது.
சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப் இன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் பிரதம பங்கேற்பாளராக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில், பொதுச் சுகாதார வைத்திய பரிசோதகர்களான ஏ.எல். ஜௌஸ், ஏ.எச். றியாஸ், விவசாய போதனாசிரியர் எஸ்.ஏ.எல். பஹ்மி அஹமட், கிராம உத்தியோகத்த எம்.ஜே.எம். அத்தீக், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ்வேலைத் திட்டத்தின் முக்கிய பங்காளர்களான செனட் கிராமமத்தின் கிராம மட்டத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் சிறுவர் கழகத்தின் ஊடாக, சிறுவர்களின் பாதுகாப்பு, சிறுவர் நேய கிராமம், சிறுவர்களின் உரிமைகள், கல்வி, பண்பாடு, ஆன்மீக மேம்பாடு, விளையாட்டு, ஆரோக்கியமான வளர்ச்சி, உடற்சுகாதாரம், தலைமைத்துவ ஆற்றல் விருத்தி, கற்றல் இடர்பாடுகளை இனம்கண்டு அவற்றுக்கான உடனடி மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.