தேர்தல் வேண்டுமா அல்லது இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்!!
நாட்டில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் அதனை வெற்றிகரமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்கொள்ளும். தனிவழியா அல்லது கூட்டணியா என்பது குறித்து தேசிய சபையே முடிவெடுக்கும் என்று காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான தெளிவூட்டல் பயிற்சி பட்டறை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பொருப்பாளரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டில் சர்வதேச பொது சேவைக்களுக்கான சம்மேளனத்தின் அனுசரனையில் கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று (31) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், இ.தொ.காவின் பிரதி தலைவர் திருமதி. அனுஷா சிவராஜா, மஸ்கெலியா பிரதேச சபை தலைவர் திருமதி. செண்பகவள்ளி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பணிப்பாளர்கள், இளைஞர் அணி பொது செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ், பயிற்சி பட்டறைக்கான வளவாளர் சட்டதரணி கிருஷாந்தன், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வாழ வழியின்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர். எனவே, பொருளாதார நெருக்கடியை சமாளித்து, மக்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டியதே அரசியல்வாதிகளின் முதன்மை நோக்காக இருக்க வேண்டும்.
எனினும், உள்ளாட்சிமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தேர்தலை நடத்துவதற்கு தயாரென தேர்தல் ஆணைக்குழுவும் அறிவித்துள்ளது. தேர்தல் வேண்டுமா அல்லது இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
அதேபோல நாட்டில் உள்ளாட்சிமன்ற தேர்தல் அல்ல பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால் கூட அதற்கு முகங்கொடுப்பதற்கு காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது. கடந்த உள்ளாட்சிமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கி வெற்றி நடைபோட்டோம். இம்முறையும் உரிய தீர்மானத்தை தேசிய சபை எடுக்கும்.
அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுத்து வருகின்றோம். எஞ்சியுள்ள பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும்.” – என்றார்.