தமிழ்கட்சிகள் அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பது வேடிக்கையாகவுள்ளது – கலாநிதி ஆறு திருமுருகன்!!
மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒன்று கூடிய தமிழ்கட்சிகள் அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பது வேடிக்கையாகவுள்ளது என தெரிவித்த கலாநிதி ஆறு திருமுருகன் அரசாங்கம் அறிவித்துள்ள நல்லெண்ண முயற்சிகளுக்காக மக்களின் பிரச்சினைக்காக ஒன்றுகூடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் பிரச்சினையை தீர்ப்போம் என ஒன்று கூடி உள்ள பிரதிநிதிகள் அதனைக் கதைக்காது அடுத்த தேர்தலுக்கு யார் யாருடன் கூட்டு சேர்வது எந்த கட்சியுடன் சேர்வது என்பதை கதைக்கிறீர்கள் நீங்கள் பலகட்சியாக இருப்பதை பற்றி மக்களுக்கு அக்கறை இல்லை ஒற்றுமையாக மக்கள் பிரச்சினையை தீர்க்கவேண்டும். மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரே குரலாக ஒலிக்க வேண்டும். உங்கள் பிரச்சினைகளை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவது வேடிக்கையாக உள்ளது.
மக்கள் பிரச்சினையை தீர்ப்பதாக இருந்தால் உங்கள் கோபதாபங்களை ஒதுக்கி வைத்து விட்டு மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு முன்வரவேண்டும் . காணிப்பிரச்சினையை விடுவிப்பதற்கு ஒன்றாக குரல் கொடுங்கள்.
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மக்களின் நிலங்கள் இராணுவத்தினரின் பயன்பாடுகளில் இருக்கின்றன. இந்த காணிகளில் பல இந்து ஆலயங்களும் காணப்படுகின்றன. இந்த ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு பல ஆளுநர்களிடம் அதிகாரிகளிடம் அரச தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தும் பயனலிக்கவில்லை இதற்காக குரல் கொடுத்தும் பலனில்லை.
பல இந்து ஆலயங்களுக்கு அருகாமையில் புதிதாக பெளத்த பகவானை கொண்டுவந்து இருத்தியுள்ளதை நாங்கள் கண்டுள்ளோம்.
ஆனால் மக்கள் வழிபடவிடுமாறு பல கோரிக்கைகள் முன்வைத்த போதும் அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையே காணப்பட்டது .
இத்தகைய நிலையில் தற்போதைய ஆட்சியாளர்களிடமிருந்து நல்லெண்ண முயற்சியாக பல விடயங்கள் இடம்பெறவுள்ளதாக கருத்துக்ககள் வெளிவந்துள்ளது.குறிப்பாக காணிகளை விடிவிற்கவுள்ளதாக ஐனாதிபதி மற்றும் அமைச்சர்கள் கூறியுள்ளார்கள் .
இதுமட்டுமன்றி இராணுவத்தினர் அதிகமாக இருப்பதால் அவர்களை குறைக்க வேண்டும். என்று பகிரங்கமாக தென்னிலங்கையிலே குரல் கொடுத்துவருகிறார்கள்.
உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இந்து ஆலயங்கள்,சித்தர்களின் சமாதிகளை சேதப்படுத்தி ,சின்னாபின்னமாக்கி இராணுவத்திற்கான கட்டடங்களையும்,பல மாளிகைகளையும் கட்டிவைத்துள்ளார்கள்.
இவற்றின் சாபம்தான் இன்று இலங்கையில் பொருளாதார தடைகளும்,நோய்களும் அதிகரித்துள்ளது. இது தெய்வ சாபமாகும்.எனவே அனைத்து ஆலயங்களையும் விரைவாகவிடுவிக்க வேண்டும்.
இத்தகைய நிலையில் இராணுவ பிடியில் உள்ள மக்களின் காணிகள் இந்து ஆலயங்களை விடுவிற்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன். இந்த நிலையில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக குரல்கொடுக்க முன்வருமாறு வேண்டுகின்றேன் என்றார்.