;
Athirady Tamil News

தொப்பையை போக்க உதவும் கெரட் / தோடம்பழச்சாறு கலவை!! (மருத்துவம்)

0

இன்று பலர் உடல் பருமன் மற்றும் தொப்பையால் அவதிபட்டுவருகிறார்கள். இதைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றினாலும், அதில் ஒரு சிறப்பான வழி பழச்சாறுகள் ஆகும்.

ஒருவரது உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைப்பதற்கு பலவிதமான பழச்சாறு வகைகள் உதவியாக இருக்கின்றன. அதில் சிறப்பான ஒன்று தான் கெரட் மற்றும் தோடம்பழச்சாறு கலவை. இந்த பழச்சாறு கலவையை தொடர்ந்து அருந்தி வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படுத்தப்படுவதோடு, உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.

இதில், உடலுக்குத் தேவையான விட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் இதர ஊட்டச்சத்துக்களும் மிகையாக உள்ளன. கெரட்டில் விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் டி, விட்டமின் ஈ மற்றும் விட்டமின் கே போன்றவையும், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கல்சியம் போன்ற கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, உடலை சுத்தம் செய்ய உதவியாக இருக்கும்.

இதேவேளை, தோடம்பழம் மிகவும் சுவையான பழம் என்பதோடு, இப்பழத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. தவிர, உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களான இதய நோய், புற்றுநோய், இரைப்பைக் குடல் பிரச்சினை போன்றவற்றை எதிர்த்துப் போராடவும் உதவும்.

கெரட்

கெரட்டில் டயட்டரி நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல் எடையைக் குறைக்கத் தேவையான மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த நார்ச்சத்து நல்ல செரிமானத்திற்கு உதவும் மற்றும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும்.

மேலும் கெரட், சுவை மொட்டுக்களை திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல், உடலை சுத்தம் செய்வதோடு, செரிமான நொதிகளை சுறுசுறுப்பாக செயல்படச் செய்து, உடலில் கழிவுகளை வெளியேற்றும் திறனை மேம்படுத்தும். அத்துடன், இது, இயற்கையான ஒரு சிறுநீர்ப்பெருக்கி என்பதால், இது சிறுநீரகங்களின் வழியே உடலில் இருந்து அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றத் தூண்டும்.

கெரட்டில் விட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அதிகமாகவும், கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இவை உடலின் கலோரிகளை எரிக்கும் திறனை மேம்படுத்தி, உடல் எடையை வேகமாக குறைக்கச் செய்யும். மேலும் இதில் விட்டமின் பி1, விட்டமின் பி2, விட்டமின் பி6 போன்றவையும், கொழுப்புக்கள் மற்றும் புரோட்டின்களை உடைத்தெறியத் தேவையான விட்டமின்களும் உள்ளன. இவை தசைகளில் உள்ள கொழுப்புக்களைக் கரைப்பதோடு, உடல் எடையைக் குறைக்கச் செய்யும்.

தோடம்பழம்

தோடம்பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, பல்வேறு நோய்களைத் தடுப்பதோடு, இதய ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்யும். மேலும், தோடம்பழத்தில் உள்ள பொஸ்பரஸ், பொட்டாசியம், தயமின், விட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் போன்றவையும் அடங்கியுள்ளன.

கெரட்/​ தோடம்பழச்சாறு கலவை

கெரட் மற்றும் தோடம்பழச்சாறு கலவையானது, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதோடு, இதய நோயைக் கட்டுப்படுத்தவும் செய்யும். தேவையற்ற கொழுப்பை குறைத்து, இரத்தம் உறைவதைத் தடுப்பதோடு, புற்றுநோயைத் தடுத்து, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுதவிர, தொற்றுக்களைக் குணப்படுத்தி, கண் ஆரோக்கியத்தையும், வாய் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

மேலும் இது, சரும ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதோடு, மூளையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். மற்றும் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். மற்றும் அல்சரைத் தடுப்பதோடு சிறுநீரக கற்கள் ஏற்படாமல் பாதுகாத்து மாரடைப்பின் அபாயத்தைக் குறைக்கும். அதுபோல், இரத்த சோகையையும் சரிசெய்யும்.

எச்சரிக்கை:

கெரட் மற்றும் தோடம்பழச்சாறு கலவையை, செரிமான பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், அது நிலைமையை மேலும் மோசமாக்கும். சில சமயங்களில் இந்த ஜூஸை, ஒருவர் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக குடித்தால், அதன் விளைவாக நெஞ்செரிச்சல், அதிகப்படியான அமில சுரப்பு மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.