மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின: சபரிமலையில் புத்தாண்டு தரிசனத்திற்கு 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு!!
சபரிமலையில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. நாளை புத்தாண்டு தரிசனத்திற்கு 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலையில் கடந்த 27ம் தேதி மண்டல பூஜை முடிந்தது. 2 நாள் இடைவேளைக்குப் பின் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நேற்று மாலை 5 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடை திறக்கப்பட்டிருந்தது. 6 மணி நேரத்திற்குள் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று(31ம் தேதி) முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட போது பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். இன்று 85 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இதனால் காலை முதலே பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
நாளை புத்தாண்டு தினம் என்பதால் தரிசனத்திற்கு 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இன்று சபரிமலை வரும் பெரும்பாலான பக்தர்களும் நாளை புத்தாண்டு தினத்தில் தரிசனம் செய்துவிட்டுத் தான் திரும்புவார்கள். இதனால் இன்றும், நாளையும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.