சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை..!
சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், செருவேலி எஸ்டேட்டில் உள்ள நிலம் உட்பட 2,570 ஏக்கரில் சபரிமலை விமான நிலையம் அமைக்கப்பட உள்ள நிலையில் செருவேலி எஸ்டேட் பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளதால் நிலம் கையகப்படுத்துவதற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
செருவேலி எஸ்டேட்டுக்கு அருகில் உள்ள மேலும் 307 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை பக்தர்கள் வசதிக்காக அருகிலேயே புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என 2017-ல் கேரள அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், 2018-ல் சர்வதேச டெண்டர் கோரப்பட்டு ஆய்வு நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் தற்போது நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. எனவே, சபரிமலை விமான நிலையம் கேரளாவில் 5-வது விமான நிலையமாக இருக்கும்.